இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஓதனவனேஸ்வர ஸ்வாமி
இறைவி :ஶ்ரீ மங்களநாயகி அம்பாள்
தல மரம் :நெல்லி மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
Arulmigu NellivanaNathar Swamy Temple, Thiru Nellikaval, | அருள்மிகு மங்களநாயகி அம்பாள் சமேத அருள்மிகு நெல்லிவனநாதர் சுவாமி திருக்கோயில்- திருநெல்லிக்காவல் தல வரலாறு
இது, நெல்லி மரத்தைத் தலமரமாகக் கொண்டதால், இப்பெயர் பெற்றுள்ளது. தேவ லோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண் டியதை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது. அதன் காரணமாக ஒருமுறை தேவலோகம் வந்த துர்வாசரை மதிக்காததால் அவர் கோபம் கொண்டு " நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள்" என்று சாபமிட்டார். அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத் தோன்றினார். ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்த பின் தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் நெல்லிவனநாதர் என அழைக்கப்படுகிறார். இறைவன் தங்கிய இத்தலமும் திருநெல்லிக்கா என அழைக்கப்பட்டது. மேற்கு நோக்கிய திருக்கோயில் ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடன் சுற்றிலும் மதில்கள் சூழ காட்சி அளிக்கிறது. 5 நிலை கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் பணிந்து, நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லலாம். பிராகாரத்தில் நால்வர், கஜலட்சுமி, விநாயகர், வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், சனிபகவான், தலமரம், நெல்லி, மரத்தினடியில் நெல்லிவன நாதர், பைரவர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. பிரகார வலம் முடித்துப் படிகளேறி முன் மண்டபத்தை அடைந்தால் இடதுபறம் சோமாஸ்கந்தர் தரிசனம். நேரே நடராஜ சபை உள்ளது. இருபுறத்திலும் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் மேற்புறத்தில் நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும், .மாசி மாதம் 18-ம் தேதி முதல் ஓரு வார காலத்திற்கும் மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார்.
நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. தெற்கிலுள்ள கோபுர வாயில் வழியே அம்பாள் சந்நிதியை சென்று அடையலாம். தெற்கு வாயிலுக்கு வேளியே எதிரில் ஆலயத்தின் தீர்த்தக்குளம் உள்ளது. இத்தலம் சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. பஞ்சகூடபுரம் என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் திருநெல்லிக்காவல் தலமும் ஒன்று. மற்ற பஞ்சகூடபுர தலங்கள்: (1) நாட்டியத்தான்குடி, (2) திருக்காறாயில், (3) திருத்தெங்கூர், மற்றும் (4) நமசிவாயபுரம் என்பன. கந்தர்வன் ஒருவனின் குஷ்ட நோய் இத்தலத்தில் நீங்கியது. அவன் நீராடிய ரோகநிவாரண தீர்த்தம் உள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
சிறப்புக்கள் :
ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும், மாசிமாதம் 18ஆம் நாள் முதல் ஏழுநாளும், அஸ்தமன சமயத்தில் சூரியனுடைய கிரணங்கள், இறைவரது திருமேனியில் விழுகிறது. சோழர் காலக் கல்வெட்டுகள் எட்டு படி எடுக்கப்பட்டுள்ளன
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ நெல்லிவனநாதர் திருக்கோயில் திருநெல்லிக்காவல் திருவாரூர் மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலயம் அமைவிடம்:
திருவாரூரில் இருந்து தெற்கே 13 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி 4 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.